தனது கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருத்திக்கு இத்தலத்து இறைவன் தினமும் கோயிலில் ஒரு பொன் வைத்துக் காப்பாற்றினார். மீண்டும் திரும்பி வந்த கணவன், தனது மனைவி மீது சந்தேகப்பட, பலி பீடத்திற்கு அடுத்து இருந்த நந்தியை முன்புறமாக வைத்தும், பிரகாரத்தின் பின்புறம் இருந்த தல விருட்சத்தை முன் பக்கமாக வைத்தும் இறைவன் கணவனின் சந்தேகத்தைப் போக்கியருளிய தலம். அதனால் இத்தலத்து மூலவருக்கு 'பொன்வைத்த நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
மூலவர் 'பொன்வைத்த நாதர்' என்னும் திருநாமத்துடன், உயர்ந்த பாணத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். இவருக்கு 'சொர்ணஸ்தாபனேஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. அம்பிகை 'அகிலாண்டேஸ்வரி' என்னும் திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
பிரம்ம ரிஷி என்பவர் தினமும் இத்தலத்திற்கு அர்த்த ஜாம பூஜைக்கு வந்து வழிபடுவதை நியதியாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் வருவதற்கு தாமதமாகவே கோயில் நடை அடைக்கப்பட்டது. அதனால் முனிவர் தேனீ வடிவம் எடுத்து உள்ளே சென்று சுவாமியை வழிபட்டார். இன்றும்கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேன்கூடு ஒன்று உள்ளது.
பிரம்மா, அகத்தியர், தேவேந்திரன், வேதங்கள், நாகராஜன் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|